எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். - (ஏசாயா 60:1-2).
ஹட்சன் டெய்லர் - இவருடைய பெயரைக் கேட்ட உடனே சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனத்தின் நிறுவனர் என்பது நமக்கு நினைவில் வரும். அவர் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தார். தன்னுடைய 22 வயதில் சீன நாட்டிற்கு நற்செய்தி கழகம் என்ற ஸ்தாபனத்தின் மூலம் மிஷனரியாக சென்றார். கடுமையான பாடுகள், உபத்திவங்களின் வழியாக, அநேகமாயிரம் ஆத்துமாக்களை இரட்சிப்பில் வழிநடத்தினார். தன்னுடைய வாழ்க்கையின் இறுதி நாட்களில், வாலிபர்களுக்கு இப்படியாக அழைப்பு விடுத்தார்: 'தேவனிடம் நெருப்பும் இலவசம், எண்ணெயும் இலவசம், அவருக்காக எரிந்து பிரகாசிக்க ஒரு திரியாக விளங்க யார் முன் வருகிறீர்கள்' அந்த செய்தியின் மூலம் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் சீன நாட்டிற்கு மிஷனெரியாக சென்றார்கள்.
மற்றுமொரு உண்மை சம்பவத்தையும் பார்ப்போம். ஈக்வடார் (Ecuador) நாட்டின் அடர்ந்த காடுகளில் வாழும் காட்டு மிராண்டிகளின் மத்தியில் ஊழியம் செய்ய போனவர்களில் ஒருவரும் உயிரோடு திரும்பியதில்லை. அந்த செய்தியை அறிந்தும் ஜிம் எலியட் என்ற 28 வயது வாலிபன் தன் மனைவியை பட்டணத்தில் விட்டுவிட்டு சக ஊழியர்கள் நான்கு பேருடன் 1955ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈக்வடார் (Ecuador) நாட்டிற்கு சென்றார். அவர் தன் நண்பர்களுடன், பிளேனில் பறந்தபடியே அநேக பரிசுகளை அந்த மக்கள் வாழ்கின்ற பகுதியில் தாழ விட்டனர். மூன்று மாதங்கள் அப்படியே செய்து வந்தனர் அப்போது அவைகளை பெற்றுக் கொண்ட அம்மக்களின் நடவடிக்கைகள் சிநேக பாவத்துடன் இருந்தபடியால், அவர்கள் தங்கள் வானூர்தியை ஒரு காட்டு பகுதியில் இறக்கினர். 1956ம் ஆண்டு ஜனவரி மாதம், 8-ம் தேதி அந்த வாலிபர்கள் தங்கள் குடும்பத்தினரோடு தொடர்பு கொண்டு, உற்சாகமாக பேசினர். எப்படியும் இந்த மக்களை கர்த்தருக்குள் கொண்டு வருவோம் என்று நம்பிக்கையோடு பேசினர். திரும்பவும் மாலை நான்கு மணிக்கு கூப்பிடுவதாக சொன்னார்கள். ஆனால் சடுதியில் அவர்கள் நண்பர்கள் என்று நினைத்திருந்த அந்த ஆக்கா இந்திய இன மக்கள் அவர்களை தங்கள் எதிரிகள் என்று நினைத்து, அந்த ஐந்து பேரையும், தங்கள் ஈட்டிகளால் குத்தி கொன்றனர். Nate Saint, Ed McCully, Jim Elliot, Peter Fleming, and Roger Youderian என்னும் அந்த ஐந்து பேரில் எட் மேக்குலினின் சரீரம் அங்கிருந்த ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. மற்றவர்களின் சரீரங்கள் அவர்கள் மரித்த இடங்களிலேயே அடக்கம் பண்ணப்பட்டது.
இவர்களின் இரத்தமே அங்கு திருச்சபை உருவாக வித்தாக அமைந்தது. 'மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்' - (யோவான் 12:24) என்று இயேசுகிறிஸ்து கூறினார். அதன்படி, இந்த வாலிபர்கள் தங்கள் ஜீவனையும் பாராமல், அந்த ஈக்வடாரில் அதை ஊற்றியபடியால், அந்த இடத்தில் சபைகள் நிரம்பி வழிகின்றன. தற்போது ஈக்வடார் ஒரு கிறிஸ்தவ நாடாக இருக்கறது! அல்லேலூயா!
'தன்னிடத்தில் உள்ளதை தேவனுக்காய் இழக்க தயங்குகிறவன் தேவனுக்காய் அரும்பெரும் காரியங்களை சாதிக்க லாயக்கற்றவன்' என்று ஜிம் எலியட் கூறியிருக்கிறார்.
ஆம், பிரியமானவர்களே! அறுவடை மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம். இன்றைக்கும் அநேக ஆத்துமாக்கள் தேவனுடைய இரட்சிபபின் வெளிச்சத்தில் களிகூர ஆவலாயிருக்கிறார்கள். அந்த இரட்சிப்பின் வெளிச்சத்தை ஆத்துமாக்களிடம் எடுத்து செல்ல ஆட்கள்தான் இல்லை. தேவனை நேசிக்கிற நாம் இவருடைய பணியை செய்ய முன் வரவில்லை என்றால் வேறு யார் முன் வருவார்கள்? யோவான் ஸ்நானகனைப் போல, ஹட்சன் டெய்லரை போல தேவனுக்காய் எரிந்து பிரகாசிக்க நீங்கள் முன் வருவீர்களா? ஏதோ ஒரு வகையில் தேவனுக்காய் உழைக்க நாம் முன் வருவோமா?
கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும்
தரித்திரரானதில்லை
ராஜ்ஜிய மேன்மைக்காய் நஷ்டப்பட்டோர்
கஷ்டப்பட்டதில்லை
ஜெபம்: எங்கள் கன்மலையும் துருகமுமான எங்கள் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். உம்முடைய நாமத்தினிமித்தம் நாங்கள் எழும்பி பிரகாசிக்க கிருபை செய்யும். எங்களுக்கு முன்பாக எத்தனையோ பேர் தங்கள் ஜீவனையும் பாராமல், உமக்கென்று கோதுமை மணியாக தங்களை ஒப்புக் கொடுத்தார்களே, அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் உம்மை துதிக்கிறோம். இப்போதும் சவிசேஷ வேலையினிமித்தம் பாடுபடும் எங்கள் சகோதர சகோதரிகளை நினைக்கிறோம். நாங்கள் செய்யாததை அவர்கள் உம்முடைய நாமத்தினிமித்தம் செய்கிறார்களே, அவர்களை கண்ணின் மணியை போல பாதுகாத்தருளும். இன்னும் உமக்கென்று உழைக்க அவர்களின் கைகளை திடப்படுத்தும். சோர்ந்து போகாதபடி, அவர்களை உற்சாகப்படுத்தும். அவர்களுக்காக ஜெபிக்கிறவர்களை, தாங்குகிறவர்களை எழுப்புவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :
No comments:
Post a Comment