Friday, January 18, 2008

கண்ணதாசன் கண்ட இயேசு


மங்களம்
(கவியரசு கண்ணதாசன்)



தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே!

சத்திய வேதம் நின்று நிலைத்தது
தரணி மீதினிலே!


எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!


இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!




எத்தனை கோடி செய்திகளோ இங்கு
இயேசுவைப் பற்றிவரும்


அத்தனை கோடியில் முத்துக் குளித்தோம்
ஆசையில் கற்றவரும்!


இத்தனை வந்தது மாலை தொடுத்தோம்
இதிலொரு சக்திவரும்!


தத்துவம் ஏதும் விட்டு விட்டிருந்தால்
தயவுடன் பொறுத்தருளும்!



நாடு விளங்கிட வீடு துலங்கிட
நல்லவர் பாவிகளும்


கேடு மறைந்திட கீழ்நிலை மாறிட
கேட்டதும் ஓடிவாரும்!


பாடுபவர் இதை படிப்பவர்க் க்எல்லாம்
பரமனின் வீடு வரும்!


கூடுகளில் அவன் ஆவி புகுந்து
நன்மைகள் கோடிவரும்!




வாழிய சூசை வாழிய மரியாள்
வாழிய இயேசு பிரான்!


ஆழியும் வானும் உள்ள வரைக்கும்
வாழிய தேவபிரான்!


ஏழைகள் பாவிகள் இரட்சக ராக
எங்கும் நிறைந்தபிரான்!


ஆழ்தமி ழாலே அவர்புகழ் சொன்னேன்
துன்பங்கள் சேரவிடான்!




மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!


புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!


விண்ணர சமையும் உலகம் முழுவதும்
இதுதான் தத்துவமே!


எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவோமே!


(கவியரசு கண்ணதாசன் அவர்கள்,தாம் எழுதிய "இயேசுகாவியம்"என்ற நூலின் முடிவுரையாக மேற்கண்ட பாடலை "மங்களம்"என்ற தலைப்பில்(பக்கம் 398-399)எழுதியுள்ளார்கள்.)

No comments:

free web counter