Saturday, April 30, 2011

தேவனே நமக்கு கேடகமானவர்


தேவனே நமக்கு கேடகமானவர் 
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார். - (சஙகீதம் 144:2).

 
1962-ம் வருடம் பிப்ரவரி மாதம் 20ம் தேதி சரியாக காலை 9:47 மணியளவில் விண்வெளி ஊர்தி கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் நடுவில் புகையை கக்கி கொண்டு, ஜான் கிலன் (John Glenn)  என்ற விண்வெளி ஆராய்ச்சியாளரை ஏந்தி கொண்டு கிளம்பியது. அந்த ஊர்தியில் அவர் மட்டும் தனித்து பயணம் செய்தார்.

 

அந்த விண்வெளிகலம்  பூமியை மூன்று முறை சுற்றி, நான்கு மணி நேரத்தில் 80,000 மைல்களை கடந்து வந்து படங்களை எடுத்துவிட்டு, பூமிக்கு திரும்ப ஆரம்பித்தது. அந்த ஊர்தி கீழே வந்து கொண்டிருந்தபோது, அதை கன்ட்ரோல் செய்து கொண்டிருந்த ஹுஸ்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை அந்த ஊர்தியிலிருந்து கிடைத்தது. அதன்படி, அந்த ஊர்தியில் இருந்த அக்கினி கேடகம் அதை விட்டு தனியே கழன்றுகொண்டு இருக்கிறது என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்படி அது கழன்று வந்தால், முழு ஊர்தியும் எரிந்து போய் விடும். அதிலிருந்த ஜானும் எரிந்து போய் விடுவார்.

 

இதை விண்வெளியிலிருந்து சரி செய்ய இப்போது முடியாது. ஆனால் அந்த கலம் பூமியை நோக்கி விரைவாக வந்து கொண்டிருந்தது. என்ன செய்வது என்று விஞ்ஞானிகள் யோசித்து கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரென்று அந்த விண்வெளிகலத்திற்கும் கீழே அதை இயக்கி கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையில் தொடர்பு அற்று போனது. அதை Black Hole என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எந்தவித தொடர்பும் என்ன நடக்கிறது என்று அறியாமலும் இருக்கும்போது இந்த நிலைமை ஏற்படும்.

 

நிமிடங்கள் வேகமாக கடந்து சென்று கொண்டிருந்தது. நாசா விஞ்ஞானிகள் இயக்குகிற அறையிலிருந்து என்ன செய்வது என்று தவித்து கொண்டிருந்தனர்.  ஐந்து நிமிடங்கள் கழித்து, ஜானின் குரல் அவர்களுடைய ரேடியோவில் கேட்டது 'இது ஜான்' என்று. ஜான் பூமியை நோக்கி பத்திரமாக வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்களின் மத்தியில் ஏற்பட்ட சந்தோஷம் அளவில்லாதது!

 

பின்னர் தான் தெரிந்தது, அது தவறான ஒரு சிக்னல் என்று! ஜான் பத்திரமாக வந்து தரையிறங்கினார். அவர் அந்த Black Hole லில் இருந்த அந்த நிமிடங்கள் மிகவும் அதிர வைக்கத்தக்கதாக இருந்தது.

 

வேதத்தில் யோசேப்பும் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்தார். அவருடைய சகோதரர்கள் அவரை தூக்கி ஒரு குழிக்குள் போட்டு விட்டார்கள். யாருடனும் அவருக்கு தொடாபில்லாமல் போய் விட்டது. அவர் போட்ட சத்தங்கள் யார் காதிலும் கேட்கவில்லை. பின்னர் அவரை முன்பின் தெரியாத வியாபாரிகளிடம் விற்று போட்டார்கள். அவர் அநேக பாடுகளினூடே சென்றார். ஆனால் ஒரு நாள் வந்தது. கர்த்தர் அவரை எல்லாருக்கும் மேலாக உயர்த்தினார். யோசேப்பு எதிர்பாராத உயர்வு அவருடைய வாழ்க்கையில் வந்தது.

 

ஒருவேளை நீங்களும் Black Hole என்று சொல்லப்படும் கடும் பாடுகளுக்கு நடுவில் சென்று கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் படும் பாடுகளை அறிவார் யாரும் இல்லையோ? நீங்கள் கூப்பிடும் சத்தம் கர்த்தருக்கும் கேட்கவில்லை என்று நினைக்கிறீர்களோ? உங்கள் வாழ்க்கை உங்களையும் மீறி போய் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களோ? தேவன் என்னை கைவிட்டார் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்களோ? Black Hole அனுபவம் உங்களை தனிமையாக்கிற்றோ?

 

நம்முடைய தனிமை மற்றும் துன்பமான நேரங்களில் நம்மை விட்டு தேவன் தூர போனார் என்று நாம் நினைத்தாலும், நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை என்று சொன்ன தேவன் நம்மை விட்டு விலகாமல் நம் கூடவேதான் இருக்கிறார். நம்மை காக்கும் கேடகமாக நம்மை சுற்றிலும் இருக்கிறார். உங்களுக்கு ஏற்படும் அக்கினி போன்ற சோதனைகளிலும் உங்களை சுற்றி கேடகமாக அவர் உங்களை காத்து கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் அவரோடு இன்னும் ஆழமான உறவு வைத்து கொள்ள அவர் உங்களுக்கு இந்த பிரச்சனைகளை அனுமதித்திருக்கலாம். அவரையே பற்றி கொள்ளுங்கள். நீங்கள் கர்த்தருடைய பிள்ளையாயிருந்தால், ஒன்றை ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை விட்டு விலகுவதேயில்லை என்று. யோபுக்கு அநேக துன்பங்கள் வந்தது, பிரச்சனைகள் வந்தது, ஆனால் ஒரு நாள் வந்தது, பிரச்சனைகள் மாறிப்போனது. இரட்டிப்பான நன்மைகள் யோபுவை வந்தடைந்தது. உங்கள் கண்ணீரையும், புலம்பலையும் காண்கின்ற தேவன் ஒருவர் உண்டு. அதற்கு பதில் கொடுக்கிறவரும் அவரே. அவரை பற்றி கொள்ளுங்கள். அவர் உங்களை மறப்பதில்லை! அவரே நமக்கு கேடகமும் நம்மை விடுவிக்கிறவருமானவர். ஆமென் அல்லேலூயா!

 

பயப்படாதே வலக்கரத்தாலே

பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்

பாசம் என்மேல் நீர் வைத்ததினால்

பறிக்க இயலாதெவருமென்னை

..

உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்

தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்

அக்கினியின் மதிலாக

அன்பரே என்னைக் காத்திடுமே

 

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்களுக்கு கேடகமாக, அக்கினியின் மதிலாக எங்களை பாதுகாக்கிற உமது தயவிற்காக உமக்கு நன்றி. எங்களுக்கு வரும் பிரச்சனைகளினால் எல்லாரும் எங்களை கைவிட்டார்கள், என் தேவன் கூட என்னை மறந்தார் என்று நினைக்கும் நேரங்களிலும் நீர் எங்களுடனே எப்போதும் கூடவே இருக்கிற தேவன் என்பதை நினைத்து உம்மை சார்ந்து ஜீவிக்க எங்களுக்கு பெலனை தருவீராக. பிரச்சனைகளை மாற்றுவீராக. யோபை போலவும், யோசேப்பை போலவும் உயர்த்துவீராக.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு


எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, சகோதரி சாந்தகுமாரியின் மாணவர் சதிஷ்குமார் விபத்தில் சிக்கி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ளும் அவருக்கு எடுத்து கொள்ளும் சிகிச்சைகள் நல்ல பலன் கொடுக்க ஜெபிக்கிறோம்.  நடந்து கொண்டிருக்கும் யுனிவர்சிட்டி பரிட்சைகளில் கலந்து கொள்ளும்படியாக கிருபை செய்யும். அவருடைய சகோதரனும் சென்னையில் அப்பொல்லோ ஆஸ்பத்திரியில் இருப்பதால் அவருக்கும் பரிபூரண சுகத்தை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம்.

.

சகோதரன் தேவநேசன் கொடுத்திருக்கிற ஜெப விண்ணப்பத்தையும் உம்முடைய சமுகத்தில் வைக்கிறோம். கிரேஸி, அன்பு, ஜார்ஜ் என்னும் மூன்று சகோதர சகோதரிகளுக்கும் வயதாகி கொண்டே போகிறபடியால் அவர்களுடைய திருமண காரியங்கள் சீக்கிரமாய் அமையத்தக்கதாக தேவன் கிருபை செய்வீராக.  கர்த்தர் இரங்கி கிருபை செய்வீராக. ஜெபங்களுக்கு பதிலை தருவீராக. உமக்கே எங்கள் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்து கிறிஸ்துவின் இனிய நாமத்தில் எங்கள் ஜெபங்ளை ஏறெடுக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள தகப்பனே ஆமென்.





http://www.anudhinamanna.net/

No comments:

free web counter